சிறுமியுடன் தனியாக பேசிய வாலிபர்: அடித்துக் கொலை செய்த உறவினர்கள்

பொள்ளாச்சி அருகே வீட்டில் 16 வயது சிறுமியிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை உள்ளிட்ட 3 உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் கௌதம். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7ஆம் தேதியன்று அவரது, தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். தோழி 16 வயதான சிறுமி ஆவார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.


அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை, மாமா மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரும் கௌதமை கட்டை, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


இந்நிலையில் இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் கௌதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சிறுமியின் உறவினர்கள் 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்