அலுவலகத்துக்கு வரச்சொல்லி டிக்கெட் விலையை உயர்த்தியதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை: அரசு ஊழியர்களை பணிக்கு வரச் சொல்லிவிட்டு வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கண்டக்டர்கள் வசூலிப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.  


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு உத்தரவு படி முக்கியத் துறைகள் கடந்த மே 15ம் தேதி வரை, 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது. இதற்காக 175 பேருந்துகள் இயக்கப்பட்டது.


அப்போதுபஸ் கட்டணத்தை தமிழக அரசே ஏற்றது. இந்நிலையில் பொது ஊரடங்கினை மே  31 வரை நீட்டித்துள்ளதோடு, தலைமைச் செயலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவீதப் பணியாளர்களைக் கொண்டு இயங்கும், ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.


இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் கட்டணம் உயர்வு, சமூக இடைவெளி இல்லை என்று போக்குவரத்து கழகத்தை ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.  இதுகுறித்து தலைமைச்செயலக ஊழியர்கள் கூறியதாவது:


காஞ்சிபுரம்- தலைமைச்செயலகத்திற்கான கட்டணமாக 80 வசூல் செய்யப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு-55, கே.கே.நகர்-29, திருநின்றவூர்-39, செவ்வாய்பேட்டை-44 வசூல் செய்யப்பட்டது. முன்பைவிட இது பல மடங்கு உயர்வு. காஞ்சிபுரத்தில் இருந்து மின்சார ரயிலில் தான் பணிக்கு வருவோம். அதற்கு 20 தான் செலவாகும்.


ஆனால் பேருந்தில் ₹80 வசூல் செய்யப்படுகிறது. பஸ்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றுகிறார்கள். இதனால் சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.மேலும் போதிய அளவிற்கு பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை.


இதனால் ஒருசில ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் வீடுகளுக்கு திரும்பி சென்று விட்டனர் என தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசு பஸ்களில் எவ்விதமான கட்டணமும் ஏற்றப்படவில்லை.


சாதாரண கட்டணம், டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் ஆகிய பிரிவுகளில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பயணக்கட்டணம் வேறுபாடுகள் இருக்கும். சாதாரண பிரிவில் மட்டும் குறைவான கட்டணம் வசூல் செய்யப்படும்.


அரசு ஊழியர்களை பணிக்கு அழைத்து வருவதற்கு டீலக்ஸ் பஸ்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும். அவை அனைத்தும் புதிய பஸ்கள் ஆகும். அரசு உத்தரவின்படி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.


எனவே கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மேலும் சமூக இடைவெளியுடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒருசில வழித்தடங்களில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.