ரிப்பன் மாளிகையில் 60 பேருக்கு கொரோனா

சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை, 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், கொரோனா பாதிப்பு, 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.


இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தலைமையிடமான, ரிப்பன் மாளிகை வளாக அம்மா மாளிகையில், அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுவரை, 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பு பணிகளில், மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வாயிலாக, அம்மா மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தொற்று ஏற்பட்டு பரவ துவங்கியுள்ளது.


தொற்று கண்டறியப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தொற்று பரவுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.