டெல்லி கரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4,000 தப்லீக் ஜமாத் அமைப்பினரை சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு

தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் டெல்லி காவல் துறையினர் மீட்டு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதில்கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் மற்றவர்களை தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கும் அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில், தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த சுமார் 4,000 பேரை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்க டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லியின் உயர்அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "பரிசோதனைகளும், தனிமைப்படுத்தலும் முடிந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தசுமார் 4,000 ஜமாத் அமைப்பினரை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.


அதேவேளையில் மசூதிகளில் ஒளிந்திருந்து பிடிக்கப்பட்டவர்களும், ஜமாத் நிர்வாகம் மீதான வழக்கு சம்மந்தப்பட்டவர்களும் காவல் துறை நடவடிக்கைகளுக்கு பிறகே செல்ல முடியும். மருத்துவமனைகளில் உள்ளவர்கள் சிகிச்சைமுடிந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்றனர்.


டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த தமிழக ஜமாத்களை சேர்ந்த அனைவரும் குணமடைந்து முகாமிற்குத் திரும்பி விட்டனர். இவர்களில் 700 பேர் வீடு திரும்ப டெல்லி மற்றும் தமிழக அரசின் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


ஐக்கிய நல அமைப்பு (UNWO), தமிழ்நாடு ஜமாத்துல் உலாமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு இணைந்து ஜமாத்களிடம் தகவல் பெற்று இப்பணியை செய்து வருகின்றன. தமிழக ஜமாத்தினரை ரயில் அல்லது பேருந்துகளில் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இதனிடையே, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிஹார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முகாம்களில் ஜமாத்களை சேர்ந்த சுமார் 160 தமிழர்கள் உள்ளனர்.


இவர்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் சிக்கியவர்கள் மீது மட்டும் அம்மாநில அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.