பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை நடை பெறுவதற்கான கால அட்டவணையினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருந்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேதி மாற்றம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வரவேற்கிறோம்! பாராட்டுகிறோம்!!.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை நடை பெறுவதற்கான கால அட்டவணையினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருந்தார்.


தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடர்ந்து தேதி மாற்றத்திற்கான அவசிய காரணங்களை தொகுத்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கும், தலைமைச் செயலாளர் அவர்களின் பார்வைக்கும், பள்ளிக்கல்வித்துறை  முதன்மைச் செயலாளர் அவர்களின் பார்வைக்கும், இயக்குனர்களின் நடவடிக்கைக்கும் தொடர்ந்து நாம் பதிவின் மூலம் வலியுறுத்தி வந்தோம்.


நாளேடுகளிலும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் திட்டமிட்டபடி ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என நேற்று இரவு வரை பறைசாற்றி வந்தார். 


முதலமைச்சர் அவர்களுக்கு நாம் எழுதிய இதயம் திறந்த மடல் முறையாக உளவுத்துறை மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்று தான் முடித்திருந்தோம். இன்று காலை வரை அந்த நம்பிக்கையின் மீது நமக்கு ஒரு உறுதி இருந்து வந்தது.


சட்டரீதியாகவும் 31.05.2020 நள்ளிரவு வரை ஊரடங்கு இருக்கிறபோது தேர்வு நடத்த வாய்ப்பே இல்லை. மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அறிக்கையும் மாணவர்களை உயிர்ப்பலியிடுவதில் முனைப்பு காட்ட வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு எச்சரிக்கையாகவே அவரது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.


நமது பதிவின் மீது மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களும் வரவேற்று நம்பிக்கை தெரிவித்து எழுதி இருந்தார்கள். 


இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விருப்பத்தின் பேரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்பதற்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளார். அதேபோல் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட தேர்வு ஜூன் 16ம் தேதி நடைபெறும் எனவும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வரவேற்று பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


முதலமைச்சர் அவர்களுக்கு நாம் எழுதிய பதிவினை மீண்டும் மீண்டும் படியுங்கள் காலத்தால் அழியாத பதிவாகும். குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் மட்டுமல்ல பெற்றோர்கள், மாணவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பொதுமக்களும் நன்றி பாராட்டுதலை தெரிவிப்பார்கள்.


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் இருந்தே அமைச்சராக இருந்து வந்தவர். அரசியல் அனுபவத்திலும் மூத்தவர். ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் அவ்வப்போது எடுக்கிற முடிவுகள் முன்னுக்குப்பின் முரண்பாடுடைய முடிவுகளாக  அமைந்து வருகின்றன.


மற்றதுறையல்ல கல்வித்துறை. ஆய்வு செய்து தெளிவான நிலைக்கு வந்த பிறகு முடிவு எடுத்து அறிவிப்பது ஆட்சிக்கும் நல்லது கல்வித் துறைக்கும் நல்லது என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


*இயக்குநர்களுடன்  ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அலைபேசி தொடர்பு:*
இன்று (19.05.2020) காலை  ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்வு தேதி மாற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம். தொடர்ந்து உங்களுடைய பதிவினை படித்து வருகிறோம் என்றார்கள்.


நாளை காணொளியின் மூலம் நடைபெறக்கூடிய முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களின்  கூட்டத்தில் 21ஆம் தேதி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கண்டிப்பு முற்றிலும் தவிர்க்கப் பட்டு அறிவுரை வழங்குவதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உறுதியளித்துள்ளார். 


பள்ளிதொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிக்கு வருவது அனைத்து நிலை ஆசிரியர்களின் கடமையாகும். வரவேற்க வேண்டியதை வரவேற்போம். பாதிப்பு என தெரிந்ததற்கு பிறகு அதை பக்குவமான உரையாடல்கள் மூலமும், பதிவின் மூலமும் மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இன்னமும் நமக்கு இருந்து வருகிறது. நாம் வலியுறுத்துகிற கோரிக்கைகளில் சிலது நடக்கலாம். சில கோரிக்கைகள் நடக்காமலும் போகலாம். ஆனால் தீர்வு காணும் முயற்சியில் நாம் தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட்டுக்  கொண்டிருப்போம் என்பது யதார்த்தமான உண்மையாகும். 


*தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், கற்பித்தல் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.* 


*தொடர்ந்து பதிவில் சந்திப்போம்.*


*வாழ்த்துகளுடன் அண்ணன், வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*