பெண் பத்திரிகையாளர் தற்கொலை: சமாஜ்வாதி கட்சி நிர்வாகி கைது

வாரணாசி: உ.பி மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது தற்கொலைக்கு சமாஜ்வாதி கட்சி நிர்வாகி ஷமீம் என்பவர் தான் காரணம் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுக் கொண்டார்.


ரிஸ்வானா என்ற 22 வயது பெண் பத்திரிகையாளர், பனாரஸ் இந்து கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு முடித்துவிட்டு, பல்வேறு பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களுக்கு செய்தியாளராக பணியாற்றி வந்தார்.


இவர் வாரணாசி மாவட்டம் ஹர்பல்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் திங்கள் கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


நீண்ட நேரமாக அறை கதவை தட்டியும் திறக்காததால், அவரது தந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.


போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது பத்திரிகையாளர் ரிஸ்வானா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.


அவர் எழுதி வைத்துள்ள குறிப்பில், 'தனது இம்முடிவுக்கு காரணம் சமாஜ்வாதி கட்சி நிர்வாகி ஷமீம் நோமனி' என குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து, ஷமீமை கைது செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.


ஷமீமும் ரிஸ்வானாவும் நீண்டகால நண்பர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களுக்குள் என்ன பிரச்னை என்பது யாருக்கும் தெரியவில்லை.


தனது மகள் எதை பற்றியும் தன்னிடம் கூறவில்லை. அவளுக்கு யாருடனும் பகை இருந்ததில்லை. நல்ல பத்திரிகையாளராகவும் நல்ல மகளாகவும் இருந்தார் என அவரது தந்தை கூறியுள்ளார்.