டெல்லி மாநாட்டுக்கு சென்று புதுச்சேரி திரும்பிய 2 பேருக்கு கரோனா உறுதி

டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதுச்சேரியில் உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் வீடு இருந்த பகுதி சீல்வைக்கப்பட்டுள்ளது.


கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுவை மாநிலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 2 ஆயிரத்து 479 பேர் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர்.


இவர்களில் புதுவையில் ஆயிரத்து 122, காரைக்காலில் 311, மாஹேயில் 501, ஏனாமில் 545 பேர் அடங்குவர். புதுச்சேரியில் மாஹே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியானது.


இச்சூழலில் டெல்லியில் தப்ளிக் ஜமாத் மாநாடு சென்று திரும்பியவர்களில் புதுச்சேரியை சேர்ந்த 6 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஏப்.1) உறுதி செய்யப்பட்டுள்ளது.


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் என்ற பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டு குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களும் தற்போது தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.


மேலும், இடைப்பட்ட நாட்களில் அவர்கள் புதுச்சேரியின் எந்தெந்த பகுதிகளில் பயணம் செய்துள்ளனர் என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


அத்துடன் புதுச்சேரி - கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து அரியாங்குப்பத்துக்கு நுழைய தடை விதிக்கப்பட்டு போலீஸார் தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர்.


பொதுமக்கள் முழுவதும் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சொர்ணா நகரில் வசிப்போர் வீட்டிலிருந்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


அரியாஙகுப்பத்துக்கு நுழைய தடை
சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் கேரளம் அருகேயுள்ள மாஹேயில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 68 வயது மூதாட்டிக்கு கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை தரப்பட்டு குணம் அடைந்தார். யாருக்கும் கரோனா இல்லாத சூழல் இருந்தது.


தற்போது டெல்லியில் நடந்த ஜமாத் மாநாட்டில் பங்கேற்று தென்மாநிலங்களுக்கு பலர் திரும்பியுள்ளனர்.


இம்மாநாட்டில் புதுச்சேரி அரியாங்குப்பத்திலிருந்து மூவரும், காரைக்காலில் 2 பேரும், ஏனாமில் ஒருவரும் என ஆறு பேர் பங்கேற்றது கண்டறியப்பட்டது. புதுவையை சேர்ந்த 3 பேரை கடந்த 30-ம் தேதி தனிமைப்படுத்தினோம்.


இதில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. கரோனா உறுதியான இருவருக்கும் கோரிமேட்டில் உள்ள அரசு மார்பக நோய் மருத்துவமனையில் தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கிறோம். அவர்கள் இருப்பிடம் உள்ள அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு