இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவும் தமிமுன் அன்சாரி, 

சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-வுக்கு எதிராக 21வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.


இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், திருப்பூரில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது.


சிஏஏவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவும் தமிமுன் அன்சாரி, 
 
அமைதி வழியில் உரிமைக்காக போராடுவது தவறில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எல்லோருமே குடியுரிமை கருப்பு சட்டங்கள் என்பது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.


சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் போராடுகிறார்கள். போராடக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கக்கூடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து சொல்லியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. 


மேலும், போராடக் கூடியவர்கள் யாரும் எந்த வன்முறையையும் செய்யவில்லை. அமைதி வழியில் அவர்கள் ஓரிடத்திலே அமர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்கிறார்கள்.


எங்கள் உணர்வுகளை, உரிமைகளை முழங்குவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கித்தாருங்கள் என்று அவர்கள் கேட்ட பிறகும் காவல்துறை இடம் ஒதுக்க மறுத்ததன் விளைவாகத்தான் அவர்கள் அங்கு அமர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.


இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பது ஒரு வினோதமாக எங்களுக்கு தெரிந்தாலும் போராட்டக்காரர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் காவல்துறையே எல்லோருக்கும் உரிய இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
 
போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. தினமும் ஒரு லட்சம் பேரை கைது செய்வீர்களா? அப்படி கைது செய்தால் எந்த சிறையில், எத்தனை நாட்கள் அடைப்பீர்கள்? இன்று ஒரு லட்சம் பேர் கைது செய்தால், நாளை ஒரு லட்சம் பேர் கைதாவார்கள். நாளை மறுதினம் இன்னும் ஒரு லட்சம் பேர் கைதாவார்கள். நீங்கள் ஜாமீனில் விட்டாலும் வெளியே வந்து போராடுவார்கள். 
 
இந்தப் போராட்டம் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் அல்ல. குடியுரிமை, வாழ்வுரிமைக்கான போராட்டம். பொதுமக்களை அகதிகளாக மாற்றக்கூடிய மத்திய அரசினுடைய வஞ்சக சதிக்கு எதிரான போராட்டம். இதனை அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ, தலைவர்களோ முன்னெடுக்கவில்லை.


மக்களே தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். இதனை சென்னை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.


பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், மாணவர்களை இந்த போராட்டத்தில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே?


தமிழ்நாட்டில் 48க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த காத்திருப்பு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சுதந்திரமான பத்திரிகை குழுவினரையும் நான் அழைத்து வருகிறேன்.


மாண்புமிகு நீதிபதிகளையும், இந்த வழக்கை தொடுத்தவரையும் அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். எந்தப் பெற்றோராவது வலுக்கட்டாயமாக பிள்ளைகளை அழைத்து வருகிறீர்களா என்று ஆய்வு செய்யுங்கள்.


எந்தமாணவ மாணவிகளாவது எங்களது பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக தங்களை அழைத்து வந்தார்கள் என்று கருத்து சொல்கிறார்களா என்று பார்ப்போம். அதன்பிறகு உண்மைகள் அடிப்படையில் என்ன செய்வது என்று முடிவு எடுப்போம் என்பதுதான் எனது கருத்து. 


பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய பிள்ளைகள் மாலை 5 மணிக்கு மேல் போராட்டக் களத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.


தங்களது வீட்டுப் பாடங்களை போராட்டக் களத்தில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மைகள் எத்தனைப் பேருக்கு தெரியும். எனவே ஒரு வட்டத்திற்குள் இருந்துகொண்டு எதுவும் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. 
 
காவல்துறை அனுமதி தரவில்லை என்கிறீர்கள். நீதிமன்றமும் அப்புறப்படுத்துங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
 
ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்துவோம். அதில் சமசரப் பேச்சுக்கு இடமில்லை. எங்கள் மீது துப்பாக்கி தோட்டாக்களை பாய்ச்சினாலும் நாங்கள் கோபப்படமாட்டோம். அமைதியாக அதனை ஏற்றுக்கொண்டு எங்களது உரிமைக்காக போராடிக்கொண்டே இருப்போம். 
 
இன்று (05.03.2020) காத்திருப்பு போராட்டம் நடைபெறக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் ஐந்து இடங்களில் பேசுகிறேன்.


மாலை 6.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை பேசுகிறேன். இதுபோன்ற விசயங்களால் நான் பின்வாங்கப் போவதில்லை. அதுவும் மீறி என்னை கைது செய்தால் நான் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். மக்களும் தயாராகவே இருக்கிறார்கள். 
 
போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
 
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு கேரள சட்டமன்றம், மேற்கு வங்க சட்டமன்றத்தைப் போன்று தமிழ்நாடு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுமட்டும்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு