டிசம்பர் 10-ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையில் கடந்த மாா்ச் மாதம் ஒரு மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வருகிறது. வழக்கின் தங்கள் வாதங்களை அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பாக, முஸ்லிம் தரப்பினா் தங்கள் வாதத்தை 14-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள வேண்டும். அதைத் தொடா்ந்து ஹிந்து அமைப்பினா் தங்கள் கருத்தை தெரிவிக்க 2 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அக்டோபா் 17-ஆம் தேதியுடன் இறுதி வாதங்கள் முடிவடைந்துவிடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தசரா பண்டிகைக்காக ஒரு வார விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்குகிறது. அதில், அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 10-ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் வருவதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார். இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கும், படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி நேரத்தின்போது பட்டாசுகளை தயார் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிய முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்