கல்லூரி மாணவர்களை பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

திருப்பூரில் அரசுப் பேருந்துக்கு ஆயுத பூஜை கொண்டாடுவதாகக் கூறி, பயணிகளை இடையூறு செய்த கல்லூரி மாணவர்களை பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா வரும் 7-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும், அக்டோபர் 5, 6 தேதிகள் வார விடுமுறை தினம் என்பதாலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் நேற்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப் பட்டது. இதனால், பல பள்ளி கல்லூரிகளில் வழக்கமான சீருடையை தவிர்த்து மாணவ, மாணவியர் வண்ணமயமான புத்தாடைகள் அணிந்து சென்றனர். கல்லூரிகளில் மாணவர்கள் வேஷ்டி, மாணவியர் சேலை அணிந்து சென்றனர். இந்நிலையில், வீரபாண்டியில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வழியாக 15-வேலம்பாளையம் நோக்கி செல்லும் நகரப் பேருந்துக்கு, அந்த பேருந்தில் வழக்கமாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று ஆயுத பூஜை கொண்டாடினர். பேருந்தின் முகப்பு பகுதியை மாலை, வண்ண காகிதங்களால் அலங்கரித்து, பூஜை செய்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பேருந்தில், படிக்கட்டில் தொங்கியவாறு சத்தம் போட்டுக் கொண்டு மாணவர்கள் பயணித்துள்ளனர். இது பிற பயணிகளுக்கு இடையூறாக இருந்ததால், மாணவர்களை உள்ளே வருமாறு நடத்துநர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், அவருடன் மாணவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். ஓட்டுநர், நடத்துநர் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து போலீஸார் இறக்கி எச்சரித்ததுடன், கல்லூரி நிர்வாகிகள், பெற்றோரை அழைத்து தகவல் கூறி அனுப்பி வைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்