ஒரு யுனிட் மின்சாரத்திற்கு 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த நிலையத்தில், சார்ஜிங் செய்வதற்கான கட்டணமாக ஒரு யுனிட் மின்சாரத்திற்கு 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 யுனிட் மின்சாரம் சார்ஜ் செய்வதற்கு சுமார் 1 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. 80 சதவீதம் வரையில் வேகமாகவும் அதன் பின்னர் பொறுமையாகவும் சார்ஜ் ஆக கூடிய வகையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிய எலக்ட்ரீபை (Electreefi) என்ற செல்போன் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியில் தங்களது விவரங்களை பதிவு செய்து சார்ஜ் செய்வதற்கான கட்டணத்தை செயலி மூலமாகவே செலுத்திவிட்டு சார்ஜிங் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் சார்ஜிங் நிலையம் போன்று, கோயம்பேடு மெட்ரோ நிலையம், அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ நிலையம், உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாக எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மெட்ரோ ரயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். வரக்கூடிய ஆண்டுகளில் மின்சாரத்தினால் இயங்கக்கூடிய வாகனங்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் இது போன்ற மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.