8 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரும்பு கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

பல்லாவரம் அருகே மாமூல் தர மறுத்ததால் 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரும்பு கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில் 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் காஜா முகைதீன் (42). அதே பகுதியில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அரிவாள், கத்தி, இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கும்பல் காஜா முகைதீனின் கடைக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்த கடை ஊழியர்களிடம், 'காஜா முகைதீன் எங்கே?' என கேட்டனர். அதற்கு ஊழியர்கள் 'தெரியாது' என கூறினர். அதற்கு அவர்கள் ''எங்களுக்கு தர வேண்டிய மாமூல் பணத்தை கொடுங்கள்'' என கேட்டனர் அப்போது ஊழியர்கள், ''முதலாளி சொல்லாமல் பணம் எதுவும் தர முடியாது'' என மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கினர். இதனால் பயந்துபோன கடையின் ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசில் காஜா முகைதீன் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். * கோட்டூர்புரம் துரைசாமி நகரில் ேநற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு 8 ரவுடிகள் முகமூடி அணிந்து கொண்டு பொதுமக்களை மிரட்டி வீட்டிற்குள் செல்லுமாறு கூறி உருட்டு கட்டை மற்றும் கற்களால் 5 பைக்குகளை அடித்து உடைத்தனர். பின்னர் நேற்று அதிகாலை அதே நபர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பைக்குகளை உடைத்து விட்டு சென்றதாக ஆட்டோ ஓட்டுனர் மதன் (27), அவுசிங் போர்டு பகுதியை ேசர்ந்த ராஜா (24) ஆகியோர் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் முகமூடி அணிந்து தகராறில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட ரவுடி கும்பலை தேடி வருகின்றனர். * பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கவின் (50). கடந்த 10 ஆண்டாக பெரம்பூர் பிபி சாலையில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ₹3 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து செம்பியம் போலீசில் கவின் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த அஜித் (21), தயாளன் (22), பிரகாஷ் (20) ஆகிய 3 பேரை கைது செய்தார். * புளியந்தோப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் காந்தி (54). மாநகராட்சி அலுவலக டிரைவர். கடந்த வெள்ளிக்கிழமை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோயிலுக்கு காந்தி பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ, பைக் மீது மோதியதில் காந்தி கீழே சாய்ந்தார். ஆட்டோவில் இருந்து 4 பேர் ஆயுதங்களுடன் கீழே இறங்கி, ''நீ தானே கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தாய்''' என்று கேட்டு தாக்க முயன்றனர். காந்தி, வேகமாக ஓடிச்சென்று ரோந்து போலீசாரிடம் கூறினார். போலீசார் வருவதை பார்த்ததும் கும்பல் அதே ஆட்டோவில் தப்பிவிட்டனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் காந்தி புகார் செய்தார். கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் மனோகரின் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த தணிகைவேல் (32), சிவா (34) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். * சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சதீஷ்குமார். ஐ.டி ஊழியர். நேற்று காலை கோயம்பேடு காளியம்மாள் கோயில் தெரு அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென சதீஷ்குமாரை தாக்கி செல்போனை பறித்து சென்றனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். * பீகாரை சேர்ந்தவர் மனோஜ் யாதவ் (35). அடையாறு எல்.பி சாலையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று 4வது மாடியில் வேலை செய்தபோது மனோஜ் யாதவ் தவறி விழுந்து இறந்தார். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி: குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலை நகர் சக்கரபாணி தெரு விரிவு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சூரியகலா. இவர்களுக்கு ராகவி (6) என்ற மகள் மற்றும் ஒரு ஆண் கைக்குழந்தை உள்ளது. ராகவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் ராகவி வீட்டின் 2வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ராகவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆள்காட்டி விரலை கடித்து துண்டாக்கியவர் கைது: மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பேபி (40). இவர், நேற்று முன்தினம் மனைவியுடன் கோயம்பேடு வந்துள்ளார். அப்போது பஸ் நிலையத்தில் குடிபோதையில் இருந்த விழுப்புரத்தை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் பேபியின் மனைவியை உற்று பார்த்துள்ளார். இந்த தகராறில் சக்திவேலின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து துண்டாக்கிய பேபியை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்