பல ஆயிரம் கேமராக்கள் இருந்தும் துப்பு கிடைக்கவில்லை- திருச்சி போலீஸுக்கு ‘துருப்புச் சீட்டை’ கொடுத்தது திருவாரூர் போலீஸ்;

திருச்சி மாநகரில் பொருத்தப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான கேமராக்களின் பதிவுகளில் லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை கண்டறிய முடியாமல் திருச்சி போலீஸார் தவித்தனர். அந்த சூழலில் திருவாரூர் போலீஸாரிடம் குற்றவாளி ஒருவர் எளிதில் சிக்கி, துருப்புச்சீட்டாக மாறியது காவல்துறையினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகரில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் மாநகர காவல்துறை சார்பில் சத்திரம், மத்திய பேருந்து நிலையங்கள், ரயில்வே ஜங்ஷன், சிக்னல்கள், சாலை சந்திப்புகள், முக்கிய தெருக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் 40 அகன்ற திரைகள் பொருத்தப்பட்டு காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான வணிக நிறுவனங் கள், வீடுகளிலும் சிசிடிவி கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் திருச்சி மாநகரில் 10,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 1,000 கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இனி, திருச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், கேமராக்களின் பார்வையிலிருந்து தப்ப முடியாது எனவும் காவல்துறை அதிகாரிகள் பெருமையாகக் கூறி வந்தனர். செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில், இக்கேமராக்களின் சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருந்தன. கேமரா இருந்தும் பலனில்லை இந்த சூழலில், லலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கையுறை, முகமூடி அணிந்து வந்ததால் கைரேகை உள்ளிட்ட நேரடி தடயங்கள் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. எனவே, சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவு கைகொடுக்கும் என நம்பி தனிப்படை போலீஸார் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது லலிதா ஜூவல்லரிக்குள் கொள்ளையடித்த காட்சிகள் மட்டுமே போலீஸாருக்குக் கிடைத்தன. சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள், வணிக நிறுவனங்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததிலும், குற்றவாளிகள் எந்த வழியாக வந்தனர், எப்படி திரும்பிச் சென்றனர், எந்த வாகனத்தை பயன்படுத்தினர் என்ற எந்த விவரமும் கிடைக்கவில்லை. செருப்பு, வாட்ச், பை நேரடி தடயங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் சிசிடிவி கேமராக்களும் பலனளிக்காததால் ஏமாற்றமடைந்த போலீஸார், லலிதா ஜூவல்லரியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களின் கால் செருப்பு, கையில் அணிந்திருந்த வாட்ச், நகைகளை கொண்டு சென்ற பை ஆகியவற்றை மட்டுமே நம்பி அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர். பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்குபோல, இதையும் பல மாதங்கள் விசாரிக்க நேரிடுமோ என போலீஸாருக்குள் ஒருவித சோர்வும் இருந்தது. அந்த சூழலில்தான், கொள்ளை நடந்த மறுநாளே திருவாரூரில் நடைபெற்ற வாகன தணிக்கையின்போது, நகை களுடன் மணிகண்டன் என்பவர் சிக்கியது திருச்சி மாநகர போலீஸாரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. எனவே, தகவல் கிடைத்த சில மணி நேரத்துக்குள் துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட போலீஸார் திருவாரூருக்கு விரைந்து சென்று மணிகண்டனிடம் விசாரணையைத் தொடங்கினர். மேலும், திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர். போலீஸாருக்கு இன்ப அதிர்ச்சி இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, ''அண்மைக்காலமாக திருச்சிக்குள் நடைபெற்ற பெரும்பாலான நிகழ்வுகளில் குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் பயன்பட்டன. ஆனால், லலிதா ஜூவல்லரி வழக்கில் கொள்ளையர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர். சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிச் சுற்றி கேமராக்கள் இருந்தும், ஒன்றில் கூட கொள்ளையர்களின் நடமாட்டத் தைக் கண்டறிய முடியவில்லை. வி.என்.நகர் பகுதியில் மட்டுமே சந்தேகத்தின்பேரில் ஒரு காட்சி சிக்கியது. ஆனால், அதனாலும் பலன் ஏற்படவில்லை. எங்கெங்கு கேமராக்கள் உள்ளன என்பதைக்கூட கொள்ளையர்கள் முன்கூட்டியே கண்காணித்து, அதற்கேற்ப தங்களது வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வழக்கு மிகச்சவாலாக இருக்கும் என நினைத்த நேரத்தில், திருவாரூர் வாகனசோதனையில் மிக எளிதாக குற்றவாளி சிக்கியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த துருப்புச் சீட்டைக் கொண்டு, அந்த கும்பலை முழுவதுமாக பிடித்து, நகைகளை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது'' என்றனர். ராமஜெயம் கொலை வழக்கு திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியிலுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நடைபயிற்சிக்கு சென்றவரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொலை செய்ததாக தெரியவந்தது. எனவே, அவர் நடைபயிற்சி சென்ற தில்லைநகர் பகுதி உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால், ஒன்றில்கூட ராமஜெயம் குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைக்கவில்லை. அப்போதும் திருச்சி மாநகர போலீஸாருக்கு ஏமாற்றமே கிடைத்தது. அதன்பின் மாநகர காவல்துறையிலிருந்து சிபிசிஐடி, சிபிஐ என இவ்வழக்கு மாற்றம் செய்யப்பட்டாலும், இன்னும் குற்றவாளிகளும் கண்டறியப்படவில்லை. துப்பும் கிடைக்கவில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்