இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மு.க.ஸ்டாலின்....!
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அதற்கு மறுநாளே முதலமைச்சரும், அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேரூர், பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெயருக்கு மட்டுமே இருப்பதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றும் விமர்சித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரது உறவினர்களும் 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்துக்கும் தண்டனை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார். ரூபி மனோகரன் நாட்டை பாதுகாத்த ராணுவ வீரர் என குறிப்பிட்ட ஸ்டாலின், அவர் நாங்குநேரி தொகுதியையும் பாதுகாப்பார் என்றார்.