விருதுகளை வாரிக்குவிக்கும் ‘ராட்சசன்’!

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்பட விருது விழாவில் நான்கு விருதுகளை பெற்றிருக்கிறது. இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் “ராட்சசன்”. இத்திரைப்படம், தமிழ் மட்டுமல்லாது ரக்‌ஷசுடு என்ற பெயரில் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரது நடிப்பில் தெலுங்கில் வெளியானது. தமிழில் திரையரங்குகளில் வெளியானது முதலே நேர்மறையான கருத்துக்களை பெற்றுவந்த இத்திரைப்படம் உலக அளவில் 20 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். பி.வி.சங்கர் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷ் எடிட்டிங்கும் செய்திருந்தனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல விருதுகளையும் வாங்கியது. ஜனவரி 2019ல் ஆனந்தவிகடன் சினிமா விருதுகளில் சிறந்த எடிட்டிங்கிற்கும், ஏப்ரல் மாதம் நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட திருவிழா விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த நடிகர், சிறந்த வில்லன், சிறந்த எடிட்டர், சிறந்த கதையமைப்பு மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருதுகளையும், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த அறிமுக நடிகர் விருதையும், ஆகஸ்டு மாதம் ஆனிரோஸ் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த இசை மற்றும் சிறந்த த்ரில்லர் பிரிவில் விருதுகளையும், டைமண்ட் திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த இசைக்கு விருதையும், செப்டம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விருது விழாவில் சிறந்த இசை மற்றும் சிறந்த ஆக்‌ஷன் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் (LAFA) விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த த்ரில்லர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளி நான்கு விருதுகளை வாங்கியது. திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்ட நிலையில், இத்திரைப்படம் இன்னும் விருதுகளை சர்வதேச அளவில் பெற்று வருகிறது. இத்திரைப்படம் தேசிய விருது பெறும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தமிழ் மொழி திரைப்படங்கள் எதுவும் விருது பெறவில்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இது குறித்து தனது வருத்தத்தை விஷ்ணு விஷால் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் தனுசும், இத்திரைப்படம் தேசிய விருது பெறும் என்று எண்ணியதாகவும்,தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்