மோடி - ஜின்பிங் சந்திப்பு : 10 சிறப்பம்சங்கள் :

புதுடில்லி : இன்று (அக்.,11) இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்திக்கிறார். மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றி பார்க்கும் இவர்கள், உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொடர்ந்து பகல் மற்றும் இரவு உணவுகளை ஒன்றாக இணைந்து சாப்பிட உள்ளனர். மோடி - ஜின்பிங் இடையேயான சந்திப்பின் போது எல்லைப் பிரச்னைகள், பயங்கரவாதம் உள்ளிட்டவைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 1. மோடி-ஜின்பிங் சந்திப்பின் போது பாதுகாப்பு அதிகாரிகளும், மொழிபெயர்ப்பாளர்களும் மட்டுமே உடன் இருப்பார்கள். இவர்களின் சந்திப்பின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகாது எனவும், கூட்டறிக்கை ஏதும் வெளியிடப்படாது எனவும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2. பயங்கரவாத பயிற்சி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி, பயங்கரவாத குழுக்களுக்கு மற்ற உதவிகள் உள்ளிட்ட பயங்கரவாதம் தொடர்பான ஆலோசனை இந்த சந்திப்பின் போது முக்கிய அம்சமாக இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்திய-சீன எல்லைகள் தொடர்பான பேச்சுவார்த்தையும் இடம்பெறலாம் எனவும், அது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 3. பகல் 2 மணியளவில் சென்னை வரும் ஜின்பிங், அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல உள்ளார். மோடியும் ஜின்பிங்கும் இணைந்து அர்ஜூனன் தவம், பஞ்சரதங்கள் மற்றும் கடற்கரை கோயில் ஆகிய 3 இடங்களை சுற்றி பார்க்க உள்ளனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளையும் இருநாட்டு தலைவர்களும் கண்டுகளிக்க உள்ளனர். 4. அக்.,12 அன்று காலை, இரு நாட்டு தலைவர்களும் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட் அண்ட் ஸ்பாவில் சந்தித்து உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங்கிற்கு பகல் மற்றும் இரவு விருந்து அளிக்க உள்ளார். 5. கடந்த ஆண்டு டோக்லாமில் இருநாட்டு ராணுவங்களும் 73 நாட்கள் நேருக்கு நேர் எதிர்த்து நின்ற சில மாதங்களிலேயே சீனாவின் வுகான் நகரில் மோடியும் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். ஏரிக்கரையில் இருநாட்டு தலைவர்களும் தனிமையில் நடந்த படி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 6. டோக்லாமில் எல்லை தொடர்பாக இருநாடுகளிடையே அமைதி நிலவ இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக விளங்கியது. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக எல்லையில் அமைதியை காக்க வேண்டும் என இருநாடுகளிடையே ஒப்பந்தமும் போடப்பட்டது. 7. மோடி- ஜின்பிங் சந்திப்பிற்கு முன்பு, சீனாவில் ஜின்பிங்கை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாக்., பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியா - பாக்., நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கூறி உள்ளார். இதனால் மோடி - ஜின்பிங் சந்திப்பின் போது காஷ்மீர் தொடர்பான பேச்சும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 8. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன அதிபரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள இந்தியா, காஷ்மீர் இந்தியாவின் உள்ளார்ந்த பகுதி என்பதில் இந்தியா தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதே அனைவருக்கும் நலம் பயக்கும் என கூறி இருந்தார். 9. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வில் பாக்., எழுப்பிய போது, பாக்.,கிற்கு சீனா மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. இது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடாகவே இருந்தது. இதனால் மோடி உடனான சந்திப்பின் போது ஜின்பிங், காஷ்மீர் பிரச்னை குறித்த பேச்சை தவிர்க்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 10. மோடி-ஜின்பிங் சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திக்க போவதில்லை. இருப்பினும் இருநாட்டு அரசுத்துறை செய்தி தொடர்பாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து மோடி- ஜின்பிங் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்