அடிமைகளை விடுதலை செய்வது

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான அடிமைகளை விடுதலை செய்வது குறித்த தகவல்களை காண்போம். அடிமை கலாசாரம் என்பது இன்று, நேற்று உருவாக்கப்பட்டது அல்ல. எப்போது போர் தொடங்கப்பட்டதோ அப்போது உருவாக்கப்பட்டதுதான் அடிமை கலாசாரம். சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருப்போர் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களின் உரிமைகளை பறிக்கத் துவங்கினார்களோ அன்றிலிருந்து சங்கிலித்தொடராக மரபு வழியாக வந்ததுதான் அடிமை முறை. மனிதர்களை மனிதர்களே அடிமைப்படுத்துவதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இஸ்லாம் அனுமதித்தது இல்லை. அடிமைகளை விடுவிப்பதற்கு ஆர்வமூட்டி, ஏராளமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. அடிமையை விடுதலை செய்வதும் இறைநம்பிக்கை ஆகும். அது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமையும் என்பதை இஸ்லாம் புரிய வைக்கிறது. இந்த அடிமை முறை நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பே இருந்து வந்தது. நபி மூஸா (அலை) காலத்தில் எகிப்தை ஆட்சி செய்த சர்வாதிகாரி பிர் அவ்ன் இஸ்ரவேலர்களை ஒடுக்கி, அடிமைகளாக அடக்கி, இழிவாக நடத்தி வந்தான். அவனது அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க மூஸா (அலை) போராடினார்கள். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எனவே, நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: 'நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள். எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு' (எனவும் கூறுங்கள்). அவன் (மூஸாவிடம்) கூறினான்: 'நீர் குழந்தையாக இருந்த போது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா?, இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடம் நீர் தங்கவில்லையா?' (திருக்குர்ஆன் 26:16-18) 'பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமா?' என்று மூஸா (அலை) கூறினார்.' (திருக்குர்ஆன் 26:22) மரபு வழித் தொடரில் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இந்த முறை தொடர்ந்தது. இருப்பினும் நபிகளார் அதில் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை அடைப்பதற்கு நவீன சிறைக்கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு யார் கவனித்துக் கொள்வது? இது போன்ற சிக்கல் இருப்பதினால்தான் போர்க் கைதிகளை போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சமமாக பங்கு வைத்து கொடுத்தனர். தமது பங்குக்கு பாத்தியப்பட்டவர்களை வேண்டுமானால் தங்களிடமே வைத்துக்கொண்டு வேலை வாங்குவார்கள். தேவையில்லாத பட்சத்தில் பிறருக்கு விலைபேசி விற்றும் விடுவார்கள். பெண் கைதிகளை பொறுத்த அளவில் அவர்கள் தங்களது எஜமானர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள். எஜமான் தேவையென்றால் அவளுடன் குடும்பம் நடத்துவான். இல்லையென்றால் விற்றுவிடுவான். அவளுக்கென்று குறிப்பிட்ட எஜமான் இல்லாதபட்சத்தில் அவளை என்ன செய்தாலும் யாரும் கேட்க முடியாது. கூட்டுப் பலாத்காரத்திற்கு அவள் ஆளாகி விடக்கூடாது என்ற காரணங்களுக்காக ஒரு எஜமானனின் கட்டுப்பாட்டில் அவள் சென்று விடுகிறாள். இவர்களை பிணையில் எடுக்க சொந்தங்கள் முன் வந்தால் இவர்கள் அடிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எஜமானனுடன் குடும்பம் நடத்தி குழந்தைபேறு பெற்றெடுத்தால், தானாகவே அவள் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிடுவாள். அடிமைகள் விடுதலை பெறுவதற்கு எந்தெந்த வழிகளெல்லாம் உண்டோ அந்த வழிகளையெல்லாம் இஸ்லாம் பயன்படுத்தி, அடிமைகளை விடுவிப்பதற்கு பாடுபட்டது. அடிமைகளை விடுதலை செய்வதற்கு ஊக்குவித்தது. 'ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அவரின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக விடுதலை செய்தவருடைய ஓர் உறுப்பை இறைவன் நரகத்திலிருந்து விடுவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்', (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி) 'இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு (மீதி விலையும் செலுத்தப்பட வேண்டும்) பின்னர் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்', (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி) நபி (ஸல்) அவர்கள் தமது ஜீவிய காலத்தில் 63 அடிமைகளை விடுதலை செய்தார்கள். அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) 67 அடிமைகளை விடுதலை செய்திருந்தார்கள். அடிமைகளை விடுதலை செய்வதற்கு, அடிமைத் தன்மையை முற்றிலும் துடைத்து, அது இல்லாமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களும் பாடுபட்டார்கள். திருக்குர் ஆனும் உரத்த குரல் கொடுத்தது. 'அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும், பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்)', (திருக்குர்ஆன் 90:11-17) அடிமையை உரிமை விடுவது நரகத்திலிருந்து பாதுகாக்கும் எனும் நபிமொழியை கேட்டதும், திருக்குர் ஆனின் போதனையை ஏற்றதும் அலி பின் ஹூசைன் (ரஹ்) அவர்கள் தமது அடிமையைப் பார்த்து 'நீ இன்று உரிமை பெற்றுவிட்டாய்' என்று வாக்குமூலம் கொடுத்து, 10 ஆயிரம் வெள்ளிக்காசுகளையும் அவர் கையில் அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள். 'ஸகாத் பணத்தால் அடிமைக்கு விடுதலை வழங்குவது' ஸகாத் கொடுப்பது கடமையானவர், தம் ஸகாத்தை எட்டு வகையினருக்கு செலவு செய்யலாம் என திருக்குர்ஆன் பரிந்துரைக்கிறது. அவர்களில் ஒருவர் அடிமை ஆவார். அடிமையை விடுதலை செய்வதற்கும் ஸகாத் பணத்தை பயன்படுத்தலாம் என்பது சிந்திக்கத்தக்கது. '(ஸகாத் எனும்) தர்மங்கள் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் உரியவை', (திருக்குர்ஆன் 9:60) 'நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்றுவிட்டால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்டஈடும் கொடுக்க வேண்டும். அவர்கள் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலே தவிர; அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சார்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர் உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) இறைவனின் மன்னிப்பாகும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்', (திருக்குர்ஆன் 4:92) 'செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டாலும் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்' 'உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக இறைவன் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவன் இவ்வாறே தமது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்', (திருக்குர்ஆன் 5:89) 'கோபத்தில் மனைவியை தாய் என்று கூறினால், அதற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.' 'தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக்கூறிவிட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருக்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்', (திருக்குர்ஆன் 58:3,4) மனைவியைத் தாயுடன் ஒப்பிடுதல் அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்து வந்த ஒரு மூட நம்பிக்கையாகும். இதை இறைவன் திருத்துகிறான். மனைவியை பிடிக்காத போது 'உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்' எனக்கூறி மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்தமாட்டார்கள். இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இறைவன் மேல் சத்தியமிட்டு இப்படிக் கூறினாலும் அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு, நான்கு மாதங்களுக்குள் மனைவியுடன் சேர்ந்து விட வேண்டும். அதற்கான பரிகாரத்தை மேற்கூறப்பட்ட வசனத்தின்படி செய்திட வேண்டும். 'ரமலான் நோன்பை மனைவியுடன் உறவு கொண்டு அதை முறித்தால், அதற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்' ரமலான் நோன்பை ஒருவர் தமது மனைவியுடன் உறவு கொண்டு, அதை முறித்தால், அந்த நோன்பை திரும்பவும் நிறைவேற்றுவதுடன் அதற்கு பரிகாரமாக கணவன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு வசதி இல்லாத போது தொடர்ச்சியாக 60 நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இதுவும் இயலாமல் போனால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். 'இரு ஹுதைல் குலத்துப் பெண்கள் சண்டையிட்டனர். ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளின் வயிற்றில் பட்டு விட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளின் வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்று விட்டாள். இந்த வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் வந்தது. சிசுவுக்காக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தர வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி) இவ்வாறு குற்றப்பரிகாரத்தின் வழியாக இஸ்லாம் அடிமைகளை உரிமை விடுவதின் மூலமாக அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழித்துக்காட்டியது. பிறப்பால், நிறத்தால், இனத்தால் இஸ்லாத்தில் அடிமை என்பதே கிடையாது. ஆண்டான், அடிமை என்ற கோஷமும் கிடையாது. மனிதன் மனிதனுக்கு அடிமையாக முடியாது. மனிதன் படைத்த இறைவனுக்கு மட்டுமே அடிமை என்ற தத்துவத்தை இஸ்லாம் இறுதியில் நிலை நாட்டியது. 'உங்களில் ஒருவர் 'எனது அடிமை, எனது அடிமைப் பெண்' என்று கூற வேண்டாம். உங்களில் ஒவ்வொருவரும் இறைவனுக்கு அடிமைகள். உங்களில் உள்ள ஒவ்வொரு பெண்களும் இறைவனின் அடிமைப் பெண்கள். எனினும் அவர் 'எனது பணியாள், எனது பணிப்பெண், எனது இளம் ஆண், எனது இளம் பெண்' இவ்வாறு கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2-ந் தேதி சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இஸ்லாமே முன்னோடி. இறைவனே முன் உதாரணம். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே முன் மாதிரி, திருக்குர்ஆனே முன் அனுபவ வழிகாட்டி. அடிமைத்தனத்தை ஒழிப்பதும் இறைநம்பிக்கையே. மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்