அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை
அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், அனைத்து வகை சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளும், பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்திற்குள் இருக்கும் உபரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் வேறு மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரவல் செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பணிநிரவல் செய்வதால் கூடுதல் நிதி இழப்பு தவிர்க்கப்படுவதுடன், பணிப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.