இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் மும்முரம்...

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், திருப்போரூரில் அதற்கான அதிகபட்ச சாத்தியக் கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவதாக பிரம்மாண்டமான முறையில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக 6 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிடம் வழங்கியுள்ளது. புதிய விமான நிலையம் அமைக்க 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. புதிய விமான நிலையம் அமைக்க, சென்னை அருகே உள்ள வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய ஆறு இடங்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. திருப்போரூர் பகுதியில் உப்பு உற்பத்தி செய்வதற்காக மாருதி மரைன் எனும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த 3 ஆயிரத்து 612 ஏக்கர் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து தற்போது காலியாக உள்ளது. இதனால் நிலத்தைக் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏதுமில்லை. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் செங்கற்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு மத்தியில் திருப்போரூரில் இந்த நிலம் உள்ளதால் போக்குவரத்துக்கும் சிரமம் இருக்காது. இதற்கிடையில் 200 அடியில் படூரில் துவங்கி மாமல்லபுரம் வரை புதிய 6 வழி சாலை பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர், பையனூர் ஆகிய பகுதிகளில் விமான நிலைய குடியிருப்புகள் உருவாக்குவதற்கான நிலங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்போரூர் உள்ளது. மற்ற 5 இடங்களும் இதைவிட கூடுதல் தொலைவிலேயே உள்ளன. எனவே திருப்போரூர் பகுதியில் சென்னையின் 2 வது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்