தீவிரவாதிகள் 6 பேர் கோவையில் ஊடுருவல்? - தீவிர கண்காணிப்பு

பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர், கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி கோவையில் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கோவையில் உச்சபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டு, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன், இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 தீவிரவாதிகள், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 6 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், கோவையில் பதுங்கியுள்ள அவர்கள், விபூதி, பொட்டு வைத்து இந்துக்களை போன்ற தோறத்தில் இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவனின் பெயர் இல்யாஸ் அன்வர் என்றும் உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தளங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் திடல்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, கோவையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். உக்கடம், டவுன்ஹால் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தலா 20 பேர் கொண்ட 2 கமாண்டோ வீரர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. கோவையின் நுழைவுப் பகுதிகளில் தணிக்கைக்குப் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. நகரம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் சீருடையிலும், சாதாரண உடைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் மட்டும் காவல்துறையின் 40 ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்களின் அடையாளங்கள் சோதனையிடப்பட்டு, உறுதிப்படுத்தப்படுவதோடு, விசாரணைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள உளவுத் தகவலால் கோவை உச்சபட்ச உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்