நெல்லை ரயில்வே கோட்டம் காலத்தின் கட்டாயம்: 10 ஆண்டாக காத்திருக்கும் பயணிகள்

கடந்த 10 ஆண்டுகளாகவே தென்மாவட்ட மக்களின் பிரதான கனவு நெல்லை ரயில்வே கோட்டம். 'செங்குளம் உன்னது, செங்கோட்டை என்னது, வள்ளியூர் உன்னது, புனலூர் என்னது' என மதுரை கோட்டமும், திருவனந்தபுரம் கோட்டமும் விவேக் பாணியில் எல்கை பிரிக்கும் பரிதாபங்களை தென்மாவட்டங்களில் அதிகம் காணலாம். தென்மலையில் ஒரு ரயில் பழுதாகி நின்றால் திருவனந்தபுரம் கோட்டம் கைவிரிக்கிறது. நெல்லை அருகே மேலப்பாளையம் தண்டவாளத்தில் ஒரு பிணம் கிடந்தால் அதை அகற்ற மதுரை கோட்டம் மறுத்துவிடுவது வாடிக்கை. பரந்து விரிந்து கிடக்கும் இவ்விரு ரயில்வே கோட்டங்களின் பின்னணியில் பயணிகள் படும்பாடு சொல்லிமாளாது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலம், கடந்த 1951ம் ஆண்டு ஏப்.14ம் தேதி அமைக்கப்பட்டது. இம்மண்டலம் அமைக்கப்பட்டபோது தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் 9 ஆயிரத்து 654 கிமீ தூரத்திற்கு இருப்பு பாதைகள் இருந்தன. பின்னர் நடந்த பிரிவினைகள் காரணமாக தற்போது தெற்கு ரயில்வே மண்டலத்தில் 5 ஆயிரத்து 79 கிமீ தூரத்திற்கு இருப்பு பாதைகள் உள்ளன. இதில் சென்னை கோட்டத்தில் 698 கிமீ தூரமும், சேலம் கோட்டத்தில் 858 கிமீ தூரமும், பாலக்காடு கோட்டத்தில் 578 கிமீ தூரமும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 625 கிமீ தூரமும், திருச்சி கோட்டத்தில் 1028 கிமீ தூரமும், மதுரை கோட்டத்தில் 1293 கிமீ தூரமும் இருப்பு பாதைகள் உள்ளன. எல்லா கோட்டமும் சிறிய அளவிலே உள்ள சூழலில், மதுரை, திருச்சி கோட்டங்கள் ஆயிரம் கிமீ தாண்டி பெரிதாக காணப்படுகிறது. அதிகபட்ச கிமீ தூர எல்கையை கொண்ட மதுரை கோட்டத்தை ஏன் இரண்டாக பிரித்து நெல்லை கோட்டம் உருவாக்க கூடாது என்ற கேள்வி எழுவது இயற்கையே. இக்கேள்வியே கடந்த 10 ஆண்டுகளாக தென்மாவட்ட மக்களை துளைத்தெடுக்கிறது. எர்ணாகுளத்தில் துவங்கி நெல்லை அருகே செங்குளம் வரை திருவனந்தபுரம் கோட்டம் பரந்து விரிந்து காணப்படுகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை பிரித்து நெல்லையில் ஒரு புதிய ரயில்வே கோட்டம் அமைப்பது காலத்தின் கட்டாயமாகும். ''நெல்லை ரயில்வே கோட்டம் என்பது நீண்டநாள் கோரிக்கை. திருவனந்தபுரத்தில் நிறுத்த இடமில்லாத ரயில்களை நாகர்கோவிலுக்கும், நெல்லைக்கும் அனுப்பி வைப்பது வெகுகாலமாக நடக்கிறது. நெல்ைலயில் நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்படும் பிலாஸ்பூர் ரயில் ஒன்றே இதற்கு சாட்சி. நெல்லை, நாகர்கோவிலில் இருந்து பிலாஸ்பூர் ரயிலில் பயணிக்கும் பயணிகள் குறைவு. அந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் கேரள பகுதிகளை சுற்றி திருப்பதியும் செல்கிறது. அதில் யாராவது நெல்லையில் இருந்து திருப்பதி செல்ல முடியுமா?. நெல்லையில் கோட்டம் அமைந்தால் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்'' என்கிறார் அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து தென்மாநில செயலாளர் குலோத்துங்க மணியன். நெல்லை ரயில்வே கோட்டம் அமைந்தால் எல்கைகள் எப்படி அமையும்? அதற்கான சாத்தியகூறுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள், ஏற்கனவே தங்கள் கருத்துகளை முன்மொழிந்து உள்ளனர். விருதுநகர், மானாமதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட 615 கிலோ மீட்டர் எல்கையை இந்த கோட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் எனவும், மதுரை, திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள சில பகுதிகளை பிரித்து நெல்லையை தனி கோட்டமாக உருவாக்கினால், ரயில்வேக்கு கூடுதல் வருமானம் கிட்டும் என நெல்லை தொகுதி முன்னாள் எம்பி ராமசுப்பு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் 3 முறை பேசியுள்ளார்.  தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய எம்பி கனிமொழி, நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் ஆகியோரும் நெல்லை ரயில்வே கோட்டத்தின் அவசியம் குறித்து சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளனர். மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வைக்கும் இக்கோரிக்கை, இன்று வரை செவிமெடுக்க படாவிட்டாலும் நெல்லை ரயில்வே கோட்டம் என்பது அவசியத் தேவையாகும். இதுகுறித்து நெல்லை மக்களவை தொகுதி முன்னாள் எம்பி ராமசுப்பு கூறுகையில், ''நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ரயில்வே பகுதிகளை இணைத்து நெல்ைல கோட்டம் அமைத்திட வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே மக்களவையில் குரல் கொடுத்துள்ளேன். நெல்லை வழியாக பயணிக்கும் அனந்தபுரி, குருவாயூர், இன்டர்சிட்டி ரயில்களில் நமக்கு ஒதுக்கப்படும் கோட்டா மிகவும் குறைவு. இத்தகைய ரயில்களில் தென்மாவட்ட பயணிகளுக்கு அவசர இருக்கைகளும் (இ.க்யூ) ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நெல்லையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மதுரை, திருவனந்தபுரம் ஆகிய இருகோட்ட அதிகாரிகளையும் சந்தித்து ரயில்வே பிரச்னைகளுக்கு முறையிட வேண்டியதுள்ளது.  தென்மாவட்டங்களில் 2013ம் ஆண்டு இரட்டை ரயில் பாதைக்கான அறிவிப்பு வெளியானது. இன்று வரை ஆமை வேகத்தில்தான் பணிகள் செல்கின்றன. புதிய ரயில்கள், கூடுதல் கட்டுமானங்கள் என பலவற்றில் நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பின்தங்கியே நிற்கின்றன. கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டு வரை நெல்லை வழியாக 54 புதிய ரயில்களை இயக்கினோம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் புதிய ரயில்களை தேட வேண்டியதிருக்கிறது. நெல்லை முதல் சங்கரன்கோவில் வரை 113 கிமீ தூரத்திற்கு புதிய இருப்புப்பாதை ஆய்வு பணிகளோடு நிறுத்தப்பட்டு விட்டது. காவல்கிணறு ரயில் நிலைய பணிகள் பாதியில் நிற்கின்றன. நெல்லைக்கென தனிக்கோட்டம் இருந்தால் நாம் இங்கேயே அதிகாரிகளை சந்தித்து முறையிட முடியும். குறைந்தபட்சம் இரட்டை ரயில் பாதையை விரைவுப்படுத்த முடியும். ரயில்வே துறை என்று தனி பட்ஜெட்டை இழந்ததோ அன்று முதலே அத்துறைக்கு பின்னடைவுதான்.'' என்றார். நெல்லையின் சாபமே அதற்கடுத்துள்ள மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கூட சொந்தம் கொண்டாட முடிவதில்லை. மேலப்பாளையத்தில் ஒரு ரயில் இன்ஜின் பழுதாகி நின்றால்கூட திருவனந்தபுரம் அதிகாரிகளின் உத்தரவுகளை ரயில்வே துறையினர் நாட வேண்டியதிருக்கிறது. நெல்லை தெற்கு மாவட்டத்தையும், குமரி மாவட்டத்தையும் திருவனந்தபுரம் கோட்டம் வெகுகாலமாக கபளீகரம் செய்து கொண்டு, வளர்ச்சியிலும் பின்னடவையே அளித்துள்ளது.  திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 624 கிமீ தூரத்திற்கு வழித்தடங்கள் உள்ளன. நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 161 கிமீ தூரம் அக்கோட்டத்தோடு இணைப்பில் உள்ளது. இக்கோட்டத்தை உருவாக்கிய அதிகாரிகள், ஒரு நிபந்தனையோடு தமிழக எல்கைகளை திருவனந்தபுரத்தில் இணைத்தனர். நெல்லை-நாகர்கோவில் வழித்தடம் உருவாக்கப்பட்டவுடன் தமிழக எல்கைகள் மதுரை கோட்டத்தோடு இணைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் 1981ம் ஆண்டு நெல்லை- நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில்கள் இயங்க தொடங்கிய நிலையில், அதற்கான நடவடிக்கைகள் முற்றிலுமாக கைவிடப்பட்டன. அதன் விளைவு இன்று வரை நெல்லையின் தெற்கு பகுதிகளான நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தை கட்டி மாரடிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதுகுறித்து நாங்குநேரி, ராதாபுரம் தாலுகா பயணிகள் சங்க தலைவர் சுரேஷ் ராஜ்குமார் கூறுகையில், ''திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால் வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்கள் வளர்ச்சி அடையவே இல்லை. வள்ளியூர் ரயில் நிலையத்தில் இன்று வரை தமிழில் அறிவிப்புகள் இல்லை. கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்கள் நாங்குநேரி, வள்ளியூர் ரயில் நிலையங்களில் 2வது பிளாட்பார்ம் வழியாக செல்கின்றன. பயணிகளுக்கு வசதியாக முதல் பிளாட்பார்மிற்கு வர வேண்டும் என எங்கள் கோரிக்கையை திருவனந்தபுரம் அதிகாரிகள் செவிமெடுக்க மறுக்கின்றனர். குடிநீர், ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது.  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒருகாலத்தில் ரயில்வேயின் தெற்கு முனையமாக கன்னியாகுமரி இருக்கும் என்றார். ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தினர் அதற்கு இன்று வரை வழியில்லாமல் செய்துவிட்டனர். நெல்லை கோட்டம் மட்டுமே இதற்கு தீர்வாகும்'' என்றார். நெல்லை ரயில்வே கோட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தொன்மையானவை. நெல்ைல சந்திப்பு ரயில் நிலையம் கடந்த 1876ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி திறக்கப்பட்டது. பழமையும், புராதனமும் மிக்க இந்த ரயில் நிலையத்தை மையமாக கொண்டு இதுநாள் வரை கோட்டம் அமையாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. ஒரு கோட்டம் அமைப்பதற்கு 550 கிமீ தூர இருப்பு பாதைகள் மட்டுமே போதுமானது. நெல்லை, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கி 615 கிமீ தூர இருப்புபாதைகள் இருப்பதால் நெல்லையை புதிய கோட்டத்தை உருவாக்குவது எளிது. மதுரை கோட்டம் பெரியதாக இருப்பதால் அதன் எல்கைகளை பிரிப்பதால் பாதிப்பு ஏதும் வராது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு எல்கைகளை பிரிக்கும்போது சிறிது பாதிப்பு ஏற்படக்கூடும். குமரி மாவட்ட எல்கைகள் மற்றும் நெல்லை தெற்கு மாவட்ட எல்கைகளை நெல்லை கோட்டத்திற்கு எடுக்கும்போது திருவனந்தபுரம் கோட்டம் எல்கைகள் சுருங்கும். அதற்கு இழப்பீடாக ஆரியங்காவு முதல் கொல்லம் செல்லும் 94 கிமீ தூரத்தை திருவனந்தபுரம் கோட்டத்திற்கு ஒப்படைப்பதால் அக்கோட்டமும் கேரள எல்கைகளை கொண்டு சிறக்கும். நெல்லை கோட்டம் உருவானால் புதிய எல்கைகளை வரையறை செய்வோரும் உண்டு. அதன்படி விருதுநகர் முதல் கன்னியாகுமரி வரை 203 கிமீ தூரமும், நாகர்கோவில் முதல் குழித்துறை வரை 34 கிமீ, நெல்லை முதல் திருச்செந்தூர் 62, மணியாச்சி முதல் தூத்துக்குடி 32 கிமீ, நெல்லை முதல் தென்காசி 63 கிமீ, விருதுநகர் முதல் செங்கோட்டை வரை 123 கிமீ, விருதுநகர் முதல் மானாமதுரை வரை 91 கிமீ தூரங்களை இணைத்து நெல்லை கோட்டத்தை உருவாக்கலாம். இதில் எதிர்காலத்தில் இணைய உள்ள இரட்டை ரயில்பாதை பணிகளையும் கணக்கிட்டால் கூடுதல் தூரம் கோட்டத்தில் இணையும். புதிய கோட்டத்திற்கு தகுதிகள் என்னென்ன?  ஒரு புதிய ரயில்வே கோட்டம் உருவாக வேண்டுமெனில் ரயில்வே வாரியம், பல்வேறு விஷயங்களை அலசி ஆராயும். அந்த வகையில் புதிய கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, அதற்கு கீழ் வரும் ரயில்வே நிலையங்களின் எண்ணிக்கை, பணிகளின் அளவு, வருவாயின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்து கொள்ளப்படும். நெல்லையை பொறுத்தவரை தூத்துக்குடி, மீளவிட்டான் ஆகிய இரு ரயில் நிலையங்களும் சரக்கு வருவாயை ஈட்டி தருகின்றன. நெல்லை, அம்பை, தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் ஓரளவுக்கு பயணிகள் வருமானத்தை பெருக்குகின்றன. இருப்பினும் கோட்டத்திற்கு தகுதி என கூறப்படும் பணிகளின் அளவு (ஒர்க் ேலாடு) நெல்லை சுற்றுவட்டாரங்களில் குறைவாகவே உள்ளது. ரயில்வே கோட்டம் அமைவதில் எழும் சிக்கல்கள்  நெல்லை ரயில்வே கோட்டம் உருவாக்கப்படும்போது சில சிக்கல்கள் எழுவது வாடிக்கை. அதற்கு காரணம் நெல்லை ரயில்வே கோட்டம் உருவாக்கத்தை மையமாக கொண்டு கேரளாவில் புதிய மண்டலம் உருவாக்கப்படுமோ என்ற அச்சமும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இவற்றில் ஒரு மண்டலத்தில் அதிகபட்சமாக 6 கோட்டங்கள் மட்டுமே காணப்படுகின்றன. சென்னையை தலைமையிடமாக கொண்ட 'தெற்கு ரயில்வே' மண்டலத்தில் தற்போது சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. அதாவது கேரள பகுதிகள் சென்னை மண்டலத்தில் வருகின்றன. ஏழாவதாக தெற்கு ரயில்வேயில் நெல்லை கோட்டம் உருவாக்கப்பட்டால், அந்த மண்டலத்தை உடைத்து புதிய மண்டலம் உருவாக்க வேண்டியது வரும். அப்போது கேரளாவில் திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இதற்காகவே நெல்லை கோட்டம் உருவாவதை கேரளாவில் பெரும்பாலான அமைப்புகள், அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. எனவே நெல்லை ரயில்வே கோட்டம் அமையும்போது அது தெற்கு ரயில்வே மண்டலத்திலேயே தொடர வேண்டும் என்பது பெரும்பாலான பயணிகளின் விருப்பம். தன்னிச்சையான முடிவுகள்  மும்பை தமிழின ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை கூறுகையில், ''மும்பையில் வாழும் தமிழர்களில் அதிகமானோர் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். இருப்பினும் நெல்லையில் இருந்து மும்பைக்கு இன்று வரை தினசரி ரயில் இல்லை. நெல்லையில் கோட்டம் இருந்திருந்தால் எங்கள் கோரிக்கை எப்போதோ நிறைவேறியிருக்கும். இப்போது மதுரை கோட்டத்திலும், திருவனந்தபுரம் கோட்டத்திலும், மத்திய ரயில்வேயிடம் நாங்கள் மன்றாட வேண்டியதிருக்கிறது. நெல்லை ரயில்வே கோட்டம் அமைந்தால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கலாம். புதிய ரயில்கள் இயக்கிட அனுமதி கிடைக்கும். ஒவ்வொரு கிளைக்கும் தனி அதிகாரிகள், தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர்.'' என்றார். சிறு ரயில் நிலையங்கள் சிறப்புறுமா? எம்பி என்ன சொல்கிறார்?  நெல்லை கோட்டம் குறித்து நெல்லை மக்களவை தொகுதி எம்பி ஞானதிரவியம் கூறுகையில், ''தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தருவதில் தென்மாவட்டங்களுக்கு அதிக பங்குள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி ரயில்கள் எப்போதுமே அதிக வருமானத்தை அள்ளித் தருகின்றன. எனவே நெல்லையை மையமாக கொண்டு கோட்டம் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளேன்'' என்றார். தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்:- இதுகுறித்து நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி, அந்தோணி ஆரோக்கியராஜ் கூறுகையில், ''நெல்லை ரயில்வே கோட்டம் என்பது காலத்தின் கட்டாயம். கேரளாவில் கொல்லம் வரை நீளும் மதுரை கோட்டத்தின் எல்கைகள் கவனிப்பாரற்று கிடக்கிறது. செங்கோட்டை- புனலூர் அகல ரயில்பாதை அமைக்கவே இரு மாநில மக்களும் 10 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியதிருந்தது. திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள குமரி மாவட்ட எல்கைகளிலும், நெல்லை மாவட்ட எல்கைகளிலும் என்ன நடந்தாலும் ரயில்வே துறையினர் திருவனந்தபுரத்தை கைகாட்டுகின்றனர். வள்ளியூரில் உள்ள ஒரு பயணி தனது ேகாரிக்கை மனுவை அளிக்க கூட கேரளா செல்ல வேண்டியதுள்ளது. நெல்லை கோட்டம் உருவானால் தென்மாவட்டத்தின் வளர்ச்சி மேம்படும்'' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

SSS கல்லூரி மாணவி அஸ்வினி சுரேசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு